உமர்தம்பி ஊர் வந்த பிறகு எத்தனையோ முறை நான் துபையிலிருந்து போனில் பேசியிருக்கிறேன். இந்த விமானச் சம்பவத்தை என்னிடம் சொன்னதே கிடையாது! எங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதுபற்றிச் சொல்லவில்லை! உமர் துபை திரும்பிய பின்தான் சென்ற வாரம் விவரிக்கப்பட்ட செய்திகளை நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்! உமர்தம்பிக்கு எப்போதுமே விமானம் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் த்ரில்லிங்காக இருக்கும்! அந்த நிகழ்ச்சி அவர் வாழ்க்கையிலேயே நடந்துவிட்டது!

கட்டுரை வெளியான உடனேயே அதைத் தொடர்ந்து வெளியான பின்னூட்டங்கள் என் கட்டுரையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. இரத்தம் உறையும் நிகழ்ச்சிகள்! சந்தடி சத்தம் இல்லாமல் என் இரத்தத்தின் இரத்தங்கள் செய்திகளை எனக்கு மறைத்துவிட்டார்கள்! நான் துக்கத்தில் ஆழ்ந்து விடுவேனாம்! தூக்கத்தை துறந்து விடுவேனாம்! ஆழமான அன்புதான்! இவ்வளவு ஆழத்திலா புதைத்து வைப்பது?

உமர்தம்பி இந்த முறை ஊரிலிருந்து வந்தபோது குடும்பம் வரவில்லை. குடும்பம் இல்லாததால் சப்பாட்டுக்குத் திண்டாடினோம். ஓட்டல் உணவு உமருக்கு ஒத்துவரவில்லை. துபாய் வந்து இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது மருத்துவரிடம் காட்டியும் குணமாகவில்லை. இரத்தப் பரிசோதனைக்குப் பிறகுதான் டைபாய்டு என்று தெரிய வந்தது.

இது சோதனையான நேரம். விடுமுறை எடுத்துக்கொண்டு உமர் வீட்டில் இருந்தார். டைபாய்டினால் மிகவும் துன்பமுற்றார். நான் வேலைக்குப் போய்விட்டால் அவரைக் கவனித்துக்கொள்ள ஆள் கிடையாது. நண்பர்கள், உறவினர்கள் என்று எண்ணற்றோர் இருந்தும் அவர்களைப் பயன் படுத்திக்கொள்ள முடியாது. அவரவர் வேலை அவர்களுக்கு. துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொண்டார் உமர். டைபாயிடு நோய் வந்த பிறகு உடல் மிகவும் பலஹீனமானது. வழக்கமாக இனிப்பும் கசப்பைச் சேர்த்துக் கொண்டிருந்தது. பணியும் பிணியும் அவரைப் பின்னிக் கொண்டிருந்தன.

பணியைத் துறந்து ஊருக்குப் போய்விடலாமா என்ற முடிவுக்கு வந்தார் உமர். துபாய் வந்து ஒரு வருடத்திலேயே தனக்கு துபாய் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று சொன்ன உமர், இவ்வளவு தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். 18 ஆண்டுகள் பணியாற்றிய உமர் 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். நானும் அதே முடிவுக்கே வந்தேன். இருவரும் ஒன்றாகவே நாடு திரும்ப முடிவு செய்தோம்.

‘பணியைத் துறந்தோம்; பாஸ்போர்ட் பெற்றோம்; பயணச்சீட்டு வாங்கினோம்; புறப்பட்டு வந்தோம்’ என்றா இருக்கிறது நிலைமை? தடைக் கல்லாக இருக்கும் நடைமுறைகள் ஏராளம் அமீரகத்தில்! உமர்தம்பி, தொலை பேசித்துறை, மின்சாரத் துறை, குடிநீர்த் துறை, கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், தனது நிறுவனம் சார்ந்த குடியிருப்புத் துறை இவற்றில் ‘செலுத்த வேண்டிய பாக்கிகள் எதுவும் இல்லை’ என்று சான்றிதழ்கள் பெறவேண்டும். இவற்றைப் பெறுவதற்கு, இதுவரை உழைத்ததை விட அதிகமாக உழைக்கவேண்டி இருந்தது.

நாங்கள் வசித்து வந்தது நமக்குத் தெரிந்தவர்கள் இல்லாத பகுதி. அதனால் உமரும் நானும் பணியைத் துறந்துவிட்டு நாடு செல்வது யாருக்கும் தெரியாது! உமர்தம்பி, தொலை பேசித் துறைக்கு கணக்கை நேர் செய்வதற்காகச் சென்றார். அங்கே எங்களுக்கு வேண்டிய நண்பர் ஜாபர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடன் நாங்கள் முன்பு வசித்திருக்கிறோம். உமர் கணக்கை நேர் செய்வதற்காக வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அதிர்ச்சி யடைந்துவிட்டார். அதே வேளையில், அவர் தன் வேலையில் முனைப்பாக ஈடு பட்டிருந்தார். பிறகு தொலை பேசியில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு கணக்கை நேர் செய்துகொண்டு வீடு வந்துவிட்டார் உமர்.

மின்சாரத் துறை, குடிநீர்த் துறை அலுவலகங்களுக்குச் சென்று கணக்கை நேர் செய்துவிட்டு வந்தார். அதற்கான சான்றுகளையும் பெற்றார். அடுத்து வங்கிக் கணக்கை நேர் செய்யவேண்டும். இவருடைய வங்கிக்கணக்கு மஷ்ரக் வங்கியில் இருந்தது. முன்பு உமர் அபுதாபியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அபுதாபி கிளையில் கணக்குத் திறந்தார். பணம் எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அமீரகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் ATM மூலம் பணம் பெற்றுக்குக் கொள்ளலாம். ஆனால் கணக்கை முடிக்க நேரில்தான் செல்லவேண்டும்.

இதற்காக நானும் உமரும் 12 ஆண்டுகளுக்குப் பின் அபுதாபி சென்றோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள்? இந்த மாற்றங்களால் எவ்வளவு தடுமாற்றங்கள்? அவர் வசித்த இடங்கள் எப்படி மாறிப் போயிருந்தன! அமீரகமே ஒரு தனி ரகம்தான்! எங்கள் நினைவில் மங்கிப்போன இடங்களை மீண்டும் பார்த்துத் துலங்கச் செய்தோம். ஏனோ தெரியவில்லை உமருக்கு தாம் பணிசெய்த நிருவனத்தைப் பார்க்க மனமில்லை! மஷ்ரக் வங்கிக்குச் சென்றோம். இது பழைய ஒமான் வங்கி! மஷ்ரக் என்றால் விடியல் என்று பொருள்! ஆனால் எங்கள் பணி முடிய மஃரிப் (அந்தி) ஆகிவிட்டது! பணிபுரியும் இடத்தில் காலத்தின் அருமை தெரியாத எருமைகள் இருந்தால் பொறுமை காக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது! ஒருவாராக வேலையை முடித்துக்கொண்டு துபாய் வந்தோம்.

அடுத்து தனது நிறுவனம் சார்ந்த குடியிருப்புத் துறையிலிருந்து, ‘உமர் வீட்டை எந்தவிதமான பழுதுகளும் இல்லாமல் திருப்பித்தார்; அவர் வீட்டைக் காலி செய்வதில் எந்தவித மறுப்பும் இல்லை’ என்று பரிந்துரை பெற்றார். ஆனால் வீட்டிலிருந்த கட்டில், பீரோ போன்ற தளவாடச் சாமாங்களை என்ன செய்வதென்று புரியவில்லை. எப்போது பயணம் செய்வோம் என்பதற்கான திட்டம் முன்பே இருந்திருந்தால், பழைய பொருள்கள் (used goods) வாங்கும் வியாபாரிகளிடம் கொடுத்திருக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அங்கே இருந்த பணியாளர்களிடமே கொடுத்துவிட்டோம்!

உமர், அமீரகத்தில் தாம் எந்தத் துறைக்கும் பாக்கி வைக்கவில்லை; எல்லாவற்றையும் நேர் செய்துவிட்டார் என்பதற்கான சான்றுகளை தம் தலைமையகத்தில் சமர்ப்பித்தார். தனது பயணத் தேதி செப்டம்பர் 15 என்று சொன்னார். தலைமையகத்தில் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத் தேதியில் விசாவை ரத்து செய்வதற்காக வரச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன தேதியில் உமர் குடியுரிமைப் பிரிவு அலுவலகம் சென்று விசாவை ரத்து செய்துகொண்டார். நானும் விசாவை ரத்து செய்துவிட்டேன். எங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே இருந்த எல்லாக் கணக்குகளையும், உடன் பணி புரிந்தவர்களோடு இருந்த உறவு முறைக் கணக்குகளையும் நேர் செய்துகொண்டு, கனக்கும் இதயத்தோடு விடை பெற்றோம்.


Continue reading at the original source →